இலங்கை வரலாற்றில் முதல் செய்மதி தொலைக்காட்சிச் சேவை ஆரம்பம்

dish-tv-antanaஇலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்மதி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதலாவது செய்மதி தொலைக்காட்சிச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனையிலுள்ள தினெத்த (மூன்றாவது கண் ) என்ற தொலைக் காட்சிச் சேவையை அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இந்த தொலைக்காட்சிச் சேவை ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு , அவுஸ்திரேலியா ஆகிய 116 நாடுகளிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.

ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் இந்த தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை வேலைத் திட்டங்கள் மாத்திரம் இந்த தொலைக்காட்சிச் சேவையில் ஒளிபரப்பப்படவுள்ளன. புதிய தொலைக்காட்சியின் சேவை பற்றி அதன் நிறைவேற்று தலைவர் ரொஹான் வெலிவிட்ட கூறுகையில் ;

எமது நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில் உலகத்தவருக்கு எமது நாட்டைப் பிழையாக நிரூபித்துக்காட்ட சில ஊடகங்கள் முயல்கின்றன. சமூக இணையத்தளங்கள் கூட தமது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தவே இயங்குகின்றன.ஆனால் எமது தொலைக்காட்சி முற்றிலும் மாறுபட்ட விதத்திலேயே இயங்கவுள்ளது. இதன் வளர்ச்சிக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் ஏனையோரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.