இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை

கடந்த வார இறுதியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட சூழல் குறித்து அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது.

journalist-media

இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகம் திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான இந்த பயிற்சி நிகழ்வு அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், இதில் பங்குபெற வந்தவர்கள் மீதான மிரட்டல் மற்றும் இந்த பயிற்சி ரத்துச் செய்யப்பட்டது தொடர்பில் இலங்கை அரசை விமர்சித்த ஊடகவியலாளர் ஒருவர் மீதான அச்சுறுத்தல் உள்ளடங்கலாக இலங்கையில் நாடு தழுவிய அளவில் இருக்கும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களின் காரணமாக இறுதியில் இந்த பயிற்சி கைவிடப்பட்டதாக அமெரிக்க தூதரக அறிக்கை கூறுகிறது.

மே மாதம் முதல் இலங்கையில் கைவிடப்பட்ட மூன்றாவது பயிற்சி அமர்வாக இது இருப்பதாகவும், இந்த பயிற்சிகளில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு ஆபத்து விளைவிப்பதாக அச்சுறுத்துவது, அவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இதற்கு முந்தைய பயிற்சி அமர்வுகளுக்கு தடங்கல் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க தூதரக அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போதும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு வழங்குவதற்கோ அல்லது அச்சுறுத்தலை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கை எடுப்பதற்கோ இலங்கை காவல்துறை முன்வரவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இவை தவிர காரைநகர் கடற்படைத் தளத்தில் இலங்கை கடற்படையில் கடமையாற்றுபவர்களினால் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை மாதம் 25ஆம் தேதி யாழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகள் குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்தும் அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைவதாகவும் அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் கூடுவதற்கான சுதந்திரத்தை தடுப்பவர்கள் தண்டனையில் இருந்து எளிதில் தப்பி வரும் மோசமான போக்கின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

இலங்கை அரசாங்கம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் அமெரிக்க அரசு தனது கவலையை தெரிவித்திருப்பதுடன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள அனைவரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Recommended For You

About the Author: Editor