இலங்கையில் 450 மரணங்கள் பதிவு – 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன், தீவிர நீரிழிவு மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 19ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட் நிமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 12 ஐச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார்.

கொவிட் தொற்றுடன், குருதி நஞ்சானமை, சிறுநீர் வழியில் ஏற்பட்ட தீவிர தொற்று நிலையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

கொவிட் நிமோனியா மற்றும் தீவிரமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை அவரின் மரணத்திற்கு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 ஐச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.

கொவிட் நிமோனியா மற்றும் தீவிர நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 518 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேலியகொடை கொத்தணியில் 487 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியில் 3 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேருக்கும் இவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 811 பேர் குணமடைந்து, நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 957 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor