இலங்கையில் இராணுவம் என் முன்னும் பின்னும் சென்று நோட்டம்! அறிக்கையில் நவிபிள்ளை காட்டம்!

நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர்  உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும்இ அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று  நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

இதில் தான் இலங்கை சென்று வந்த நிலையில் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் கையாண்ட முறை மிகவும் வருத்தமளிப்பதாகவும், தாம் சென்றிருந்த வேளை வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக இராணுவக் குறைப்பு செய்ததுடன் வட-கிழக்கை விட்டு தாம் அகன்றதும் இராணுவம் மீண்டும்  சென்றதை சுட்டிக்காட்டியுள்ளதுடன், சர்வதேச சமூகத்திற்கு பிரதான கடமை உண்டு சுயாதீன விசாரணை வேண்டும்.இலங்கையில் சுயாதீனமான பொலிஸ்துறை இல்லை, தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் நிலைகாணி பறிக்கப்பட்டதற்கு நஸ்டஈடு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது காணாமல் போனவர்கள் வட-கிழக்கில் மட்டும் தான் ஆய்வு வெளி மாவட்டங்களுக்கு இல்லை,ஐநா காணாமல் போனோர் அமைப்பு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும், 2008–2012 வரை பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் 50 பேர் வரை கைது,மீள் குடியேற்றம் திருப்தியில்லை, 2008 க்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்கள் இன்னமும் அகதிகளாக,திருமலை மாணவர் படுகொலை மற்றும் பிரான்ஸ் தொண்டு நிறுவன படுகொலைக்கு தீர்வில்லை,சரணடைந்த விடுதலைப்புலிகள் 11758 நபர்கள் விடுதலையானதாகவும் 234 பேர் புனர்வாழ்வு, 98 பேருக்கு எதிராக வழக்கு,வெலிக்கடை, வவுனியா மற்றும் இன்னும் பல படுகொலைகளுக்கு விசாரணை இல்லை, வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்,பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் மீது அடக்கு முறை,என இன்னும் பல விடயங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது இவைகள் பிரதான விடயமாக பார்க்கப்படுகிறது. இவ் அறிக்கை வருவதனை அறிந்து கொண்ட இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளின் பிரசன்னம் மிக மிக குறைவாக உள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வழமையான பாணியில் நவிபிள்ளையின் அறிக்கையினை நிராகரித்ததுடன், நாட்டில் இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை நாம் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்பதற்கு வடமாகாண சபை தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறி அறிக்கையின் விடங்களை நியாயப்படுத்தி செல்ல முற்பட்ட வேளை சபைக்கு தலைமை தாங்கியவரால் உரை இடைநிறுத்தப்பட்டது. மேலும் உரையாற்ற முற்பட்ட வேளை அனுமதி மறுக்கப்பட்டது.

நவநீதம்பிள்ளை வெளியிட்ட அறிக்கையிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சில விபரங்கள்!

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவிபிள்ளை எச்சரித்துள்ளார்

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவிபிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகரமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்

விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை

திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏ.சி.எப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.

இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை, 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை, 13 ஆவது சட்ட திருத்தம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை.

இராணுவப் பிரசன்னம் குறித்து கவலை

போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார்.

பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் நிலை

காணமல் போனோர் நிலையும் இன்று முக்கிய இடத்தை பிடித்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் மறுப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளையின் வாய்வழி அறிக்கையை நிராகரித்துள்ள ஐ.நாவுக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இலங்கையில் மனித உரிமைகள் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை குறித்து பிள்ளையினால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சன கண்ணோட்டத்தையும் மறுதலித்துள்ளார்.