இலங்கையில் இரண்டாவது அஸ்வமேத யாகம் காரைநகரில்

ramayana-asvamethaஇராமாயணத்தில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு மீண்டும் அயோத்தி மன்னனாகிய இராமன் ஊரார் சொல் கேட்டு கர்ப்பிணியான சீதையை கானகத்துக்குள் கொண்டு சென்று விடுகிறான்.

அவளுக்கு அங்கு ஒரு முனிவர் தன் ஆச்சிரமத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். அங்கு அவள் இராமனின் புதல்வர்களான லவனையும் குசனையும் ஈன்றெடுத்து வளர்த்து வருகிறாள். இந்த நிலையில் இராமர் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்துகின்றான்.

அஸ்வமேத யாகத்தின் போது மன்னனின் கொடியுடன் யாகக் குதிரை சுதந்திரமாக நடமாடவிடப்படும். அதன் பின்னே படை வீரர்கள் செல்வார்கள். எங்கெல்லாம் அந்தக் குதிரை போகிறதோ அந்த இடங்கள் யாவும் யாகம் செய்யும் மன்னனின் ஆட்சிக்கு அடிபணிந்து விட்டன என்று அர்த்தம்.

அதனால் அந்தக் குதிரையோடும் வீரர்களோடும் யாகத்துக்கான அவிசுகளையும் பொருள்களையும் பொன்னையும் அந்தச் சிற்றரசர்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம். அவ்வாறில்லாம் அந்தக் குதிரையை எந்த மன்னனாவது தடுத்து நிறுத்தினால் அவன் யாகம் செய்யும் மன்னனுடன் போரிட விரும்புகிறான் என்று அர்த்தப்படும்.

இராமனின் யாகக் குதிரை கானகம் வழியாகச் சென்றபோது அதனைச் சிறுவர்களான லவனும் குசனும் பிடித்துக் கட்டிவிடுகிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த பரதன், இலக்குவணன் முதலான இராமனின் சகோதரர்கள் உள்ளிட்ட படைவீரர்கள் சிறுவர்களோடு போரிடப் போகிறார்கள்.

ஆனால் வில்வித்தையில் தேர்ந்தவர்களான இராமனின் புதல்வர்கள் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்கிறார்கள். கடைசியில் இராமனே களத்துக்கு வருகிறான். அவனும் தோற்கும் தறுவாயில் சீதை வெளிப்பட்டு தன் புதல்வர்களிடம் இருந்து குதிரையை விடுக்கிறாள்.

இதேபோன்று மகாபாரதத்திலும் அஸ்வமேத யாகம் பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. இந்து மதத்தின் அதிஉச்ச நிலை யாகமாக அஸ்வதேம யாகமே கொள்ளப்படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டாலும் இலங்கையில் அது நடைபெறுவது மிகக் குறைவே.

“1983 ஆம் ஆண்டு இனக் கலவரங்களால் இலங்கை எரிந்து அடங்கிய காலகட்டத்தில் அமைச்சராக இருந்த இராசதுரையால் பிரேமதாஸாவின் நிதி உதவியுடன் பம்பலப்பிட்டியில் முதன்முறையாக இலங்கையில் அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டிருந்தது. இப்போது மூன்று தசாப்தங்கள் கழிந்து இலங்கையில் 2 ஆவது அஸ்வமேத யாகம் காரைநகர் மணல்பிட்டி புகலி சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.” என்று சிவஸ்ரீ சோமசுந்தரக்குருக்கள் கூறுகிறார். இவரே அஸ்வமேத யாகம் நடைபெறவுள்ள ஆலயத்தின் பிரதம குரு.

இந்த யாகம் சுமார் 3 கோடி ரூபா செலவில் நடத்தப்படுகிறது. இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட இந்துக்குருமார் ஒன்றிணைந்து இந்த யாகத்தை நடத்தி முடிக்க உள்ளனர்.

அஸ்வமேத யாகத்தின் பிரதான கூறான குதிரைகள் கண்டியிலிருந்தும் புங்குடுதீவில் இருந்தும் கொண்டு வரப்பட்டு யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உலாச் சென்றன. இறுதியாக நடைபெறவுள்ள வேள்விக்கு என பாகிஸ்தானில் இருந்து உயர்தரக் குதிரைகள் கொண்டுவரப்படவுள்ளன என்றும் கூறப்படுகிறது.

அஸ்வமேத யாகத்தின் முன்னோடியாக குதிரை உலா 3 தினங்களாக யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது.

முதல் நாள் காலை 7.12 மணிக்கு புகலி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்து சீறிப்பாய்ந்தபடி புறப்பட்ட புரவிகள் பொன்னாலை, மூளாய், சுழிபுரம், சித்தன்கேணி, அளவெட்டி, சுன்னாகம், புத்தூர், நெல்லியடி, கொடிகாமம் போன்ற இடங்கள் ஊடாகப் பயணித்து அன்றிரவு சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தங்கி நின்றன.

அடுத்தநாள் அங்கிருந்து புறப்பட்ட குதிரைகளின் ஊர்வலம் கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, செம்மணி, நல்லூர், கல்வியங்காடு, திருநெல்வேலி, யாழ்நகர், கொக்குவில், ஆனைக்கோட்டை வழியாக காரைநகரைச் சென்றடைந்தது.

இறுதி நாளன்று காரைநகரிலுள்ள ஆலங்கண்டு வீதி, சிவன் கோயிலடி, வலந்தலை சந்தி, கிழக்கு வீதி, துறைமுகம் மேற்கு வீதி வழியாக மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தது.

ஏறக்குறைய 57 பிரதேசங்கள் வழியாகயாகக் குதிரைகள் பயணித்திருந்தன. அன்று மாலையே அஸ்வமேத யாகக் கிரியைகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. 23 ஆம் திகதி வியாழக்கிழமை அஸ்வமேத மகா யாகம் முறைப்படி ஆரம்பமானது.

10 தினங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த மகா யாகம் எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை நிறைவு பெறவுள்ளது. யாகத்தின் பிரதம குருவாக சிட்டிவேரம் கண்ணகி ஆலய சிவஸ்ரீ இ.குமாரசுவாமிகுருக்கள் தலைமையில் இலங்கை சைவக் குருமணிகளும் இந்திய திருச்செந்தூர் ஆலய வேத பாராயண குருமணிகளும், காயத்திரிபீட குருமணிகளும் பங்கேற்று யாகத்தை திறம்பட நடத்தி முடிக்க உள்ளனர்.

யாகத்துக்கான அவிசுப்பொருள்களாக மா, மூங்கில், கருங்காலி, அரசு, தேக்கு, வில்வம், எருக்கலை, ஆல், நாயுருவி என்பன பெருமளவில் பயன்படுத்தப்பட உள்ளன.

“போரில் மரணித்த வீரர்கள், மக்கள் என்போருக்கான போர் தோஷ நிவாரணியாக இந்த யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள இந்துக்கள், வர்த்தகர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் என்போர் பங்குகொண்டு நாட்டில் சுபீட்சமும் அமைதியும் சாந்தியும் நிலவ பிரார்த்திக்க வேண்டும்.” என்று வேண்டுகிறார் புகலி சிவசுப்பிரமணியசுவாமி ஆலய பிரதம குரு சோமசுந்தரக் குருக்கள்.