இலங்கையின் 65 வருட போராட்ட வரலாறு விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும்! – மனோ கணேசன் தெரிவிப்பு

manoஇலங்கை தீவின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும், ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும், வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும். இந்த இரண்டு வழித்தடங்களையும் எதிர்கால முதல்வர் சமமாக பாவித்து முன்னெடுக்க வாழ்த்துகின்றேன்.

தமிழ் இனத்தின் நலனை முன்னிலைபடுத்தியதன் மூலம் தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா எம்பி தமிழர் ஐக்கிய வரலாற்றில் அரிய இடத்தை பெற்று கொண்டுவிட்டார்.

“அண்ணன் மாவை என்ற அடைமொழிக்கு மெய்யான அர்த்தத்தை ஏற்படுத்தி தந்துவிட்டேன்” என்பது எதிர்கால முதல்வருக்கு மாவை சேனாதிராசா தந்துள்ள செய்தியாகும்.

வடக்கு மாகாணசபையில் தமிழர் பெரும்பான்மை ஆட்சி ஏற்பட போகும் சாத்தியம் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல.

நாடு முழுக்க மேற்கிலும், மலையகத்திலும், கிழக்கிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் நட்சத்திர நம்பிக்கையை தரும் எதிர்பார்ப்பாகும் என்பதை நமது எதிர்கால முதல்வர் புரிந்துகொண்டிருப்பார் என நாம் நம்புகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் பெறப்போகும் வெற்றி மிகப்பெரும் பாரிய அதிரடி வெற்றியாக இருக்க வேண்டும். அந்த வெற்றிக்கான பிரச்சார நடவடிக்கைகளில் கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால் நமது கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி கலந்து கொள்ளுவதற்கான சாத்தியம் இருக்கின்றது.

கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வீ. விக்கினேஸ்வரன் ஏகமனதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.