இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியாவதை தடுக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் வாசிங்ரனில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கையை எப்போது வெளியிடுவது என்ற முடிவை எடுப்பது ஐ.நாவின் மனித உரிமைகள் ஆனணயாளர் மற்றும் மனித உரிமை கவுன்ஸிலின் தலைவரே. எனினும் மார்ச் மாத அமர்வில் அறிக்கை வெளியாகாது என்பது குறித்து தான் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
மார்ச் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள அறிக்கையை ஓகஸ்ட் அல்லது செப்ரெம்பர் வரை தாமதிக்கச் செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவியை இந்த விவகாரத்தில் எதிர்பார்க்கிறாரா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அடுத்த சில மாதங்களில் அனைத்து நண்பர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.