Ad Widget

இறுதிப்போரில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு!

இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான முறையில் சந்தித்தமையானது பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகள் மத்தியில் கோபத்தையும் அவமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடந்த இறுதிக்கட்ட போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகள், நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி வேறு பணிக்காக நீர்கொழும்பு சென்றிருந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் அதிகாரி ஒருவர் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் 9 இராணுவ அதிகாரிகள் முப்படை தளபதியான ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடுகளை செய்திருந்தாக தெரியவந்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியோ அல்லது இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வாவோ அறிந்திருக்கவில்லை.

ஜனாதிபதியை சந்திக்க அதிகாரிகளில் 55 வயதை பூர்த்தி செய்த ஓய்வுபெறப் போகும் சில அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கும் விசாரணைப் பொறிமுறை மூலம் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவிருப்பதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சுமத்தின. எனினும் தேசிய பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது பதிலளித்திருந்தார். இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக எதனையும் செய்ய போவதில்லை என அரசாங்கம் கூறி வருகிறது.

எவ்வாறாயினும் இராணுவ அதிகாரிகள், இராணுவ தளபதி அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகிய இருவரில் ஒருவரது அனுமதியை பெறாமல் ஜனாதிபதியை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர், இராணுவ தளபதி விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு அல்ல அதனுடன் சம்பந்தப்பட்ட உயர் மட்ட நபர்களை சந்திக்க வேண்டுமாயின் முன்னதாக இராணுவ தளபதியின் அனுமதியை பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி கிறிஷாந்த டி சில்வா, ஜனாதிபதியை சந்தித்து இந்த சம்பவம் குறித்த விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இந்த சந்திப்புக்காக தன்னிடமோ பாதுகாப்பு அமைச்சிடமோ அனுமதியை பெறவில்லை என்பதை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். மேஜர் ஜெனரல்களான ஜகத் டயஸ், மகிந்த ஹத்துருசிங்க, கமல் குணரத்ன, சவேந்திர சில்வா, நந்தன உடவத்த, பிரசன்ன டி சில்வா, ஜகத் அல்விஸ், பிரசந்த சில்வா ஆகியோரே நீர்கொழும்பு ஹோட்டலில் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்க்கான சட்டங்களை அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோல்டா செல்லும் முன்னர் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் அடிப்படையாக பேசியுள்ளதுடன் மேலதிக விபரங்கள் குறித்து பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் அடுத்த பெப்ரவரி மாதம் இலங்கை வரவுள்ளார். ஜெனிவா யோசனையின் முன்னேற்றத்தை அறியும் வகையிலேயே இவர்களில் விஜயங்கள் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.

Related Posts