Ad Widget

இரும்பு களவாட முயன்ற இராணுவத்தினர் 8 பேருக்கும் பிணை

கைதடி மற்றும் நாவற்குழி பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையின் பெரிய அளவிலான வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்களையும், இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாட முற்பட்ட 8 இராணுவத்தினரையும் சாவகச்சேரி நீதவான் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்த்pல் ஆஜராக வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் நிறுவப்பட்டுள்ள பெரிய அளிவிலான வர்த்தக விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்கள் அண்மைய காலமாக மர்மமான முறையில் அறுத்து களவாடிச் செல்லப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து, இரும்புக் கள்வரைப் பிடிப்பதற்காக சாவகச்சேரி பொலிசார், அந்தப் பகுதியில் இரகசியமாகப் பதுங்கியிருந்து கண்காணித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு இரண்டு வாகனங்களில் வந்த 8 பேர், நல்லூர்க் கோவிலின் படத்தைத் தாங்கிய வர்த்தக விளம்பரப் பலகையின் இரும்புகளைக் களவாட முயன்றார்களாம். அப்போது பாய்ந்து சென்ற பொலிசார் அவர்களைக் கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளார்கள்.

அப்போது, அந்த 8 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறாவது சிக்னல் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது என்று பொலிஸ் துறை பேச்சாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இராணுவத்தினர் பற்றிய தகவலை பொலிசார் உரிய இராணுவ அதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அவர்கள் அந்த 8 பேரையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றனர். ஆயினும் அது வெற்றியளிக்கவில்லை.

கைது செய்யப்பட்ட 8 பேரையும் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் பொலிசார் ஆஜர் செய்தபோது, அவர்களை தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அவர் அனுமதித்திருக்கின்றார்.

அத்துடன் எதிர் வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று அந்த இராணுவத்தினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts