Ad Widget

இருபதுக்கு 20 போட்டியும் நியூஸிலாந்து வசம்

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான 20பதுக்கு இருபது போட்டியில், தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, 2-0 என தொடரையும் பறிகொடுத்துள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது.

இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி (4வது போட்டி) கைவிடப்பட்ட நிலையில், மூன்று போட்டிகளில் நியூசிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதன்படி ஒருநாள் தொடரையும் 3-1 என நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில் இரண்டு ஆட்டங்கள் கொண்ட இருபதுக்கு 20 போட்டியிலும் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று ஆக்லாந்து – ஈடன் பார்க் மைதானத்தில், இரண்டாவது போட்டி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய மெத்தியூஸ் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 142 ஓட்டங்களை விளாசியது.

மேலும் பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் எலியட் (Grant Elliott) நான்கு விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இதன்படி 143 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் இலங்கை பந்து வீச்சாளர்களை களங்கடித்தார்.

25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்களாக 63 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், ஆட்டமிழந்து வௌியேற, அடுத்ததாக களம் கண்ட கொலின் முன்ரோவும் (Colin Munro) சளைக்காது அதிரடியான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.

இதனையடுத்து 10 ஓவர்களை மாத்திரமே சந்தித்த அந்த அணி 147 ஓட்டங்களை விளாசி, 60 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுக்களால் வெற்றி வாகை சூடியது.

கொலின் முன்ரோ 50 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

Related Posts