இராணுவ முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண நிதியில் சம்பளம்

இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பணம் வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியிலிருந்து சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றபோது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்துக்குக் கடந்த 2013ஆம் ஆண்டு 37.5 மில்லியன் ரூபாய் நிதி, வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியிலிருந்து சென்றுள்ளது. அதற்கான காரணத்தை வினாவியபோது, இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இது கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் காட்டப்படுகின்றது. இராணுவத்தினரால் முன்பள்ளி நடத்தப்படுகின்றது எனக் கூறிக்கொண்டு, வடமாகாண சபையின் நிதியைக் கொண்டு முன்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், அதே ஆண்டில் 20 வீடுகள் கட்டுவதற்கு 23 மில்லியன் ரூபாய் நிதி, உள்ளூராட்சி மன்றத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன ஆனது என்று இன்று வரையில் தெரியவில்லை. வடமாகாண ஆளுநருக்கான எரிபொருள் செலவு 1 இலட்சத்து 200 ரூபாய் என்று நியதியிருந்தும், அவருக்கு 1.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 1.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor