இராணுவ அராஜகங்களுக்கு விரைவில் முடிவுகட்டுவோம் – மாவை சேனாதிராசா

mavai“சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்குச் சம்பவம் இராணுவத்தின் அராஜகத்தை மீண்டுமொரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வலி. வடக்கு கட்டுவன் பகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் சிறப்புரிமையை மீறும் வகையில் அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகித்து அவருடன் முரண்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வலி. வடக்குத் தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதைப் பார்வையிடச்சென்ற கூட்டமைப்பின் எம்.பி. சரவணபவன் தலைமையிலான குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்களை அங்கு நின்ற இராணுவ அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியமை தொடர்பில் நேற்று அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தமிழ் மக்களின் 6,382 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதன் பின்னர் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளைக் கைவிட்டிருந்தனர். மீண்டும் கடந்த சில தினங்களாக அங்குள்ள தமிழ் மக்களின் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திங்களன்று இதனைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையிலான குழுவினரையும், அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களையும் அங்கு நின்ற இராணுவ அதிகாரியயாருவர் அச்சுறுத்தி தனது காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவது இராணுவத்தினரையும், இராணுவத்தின் குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காகவே என்று குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்ததன் ஊடாக அவர்களின் உண்மையான நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.

நிலத்துக்குச் சொந்தக்காரரான தமிழ் மக்கள் அகதிவாழ்வு வாழ அங்கு இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் குடியமர்வது எந்தவகையில் நியாயமானது?

நடந்துமுடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவான ஆணையை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கியுள்ளனர்.

அதாவது, இராணுவத்தின் தலையீடுகள் எதுவுமின்றி வடக்கில் தமிழரைத் தமிழரே ஆளவேண்டும் என்பதே வடக்கு மக்களின் ஆணையாகும்.

இதனையும் மீறி மீண்டும் பழையபடி வலிகாமம் வடக்கில் தமது அராஜக நடவடிக்கைகளைக் காட்டத் தொடங்கியுள்ளனர் இராணுவத்தினர். இராணுவத்தினரின் இவ்வாறான செயல்கள் தமிழ் மக்களை மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்துக்கே இட்டுச்செல்லும்.

எனினும், அந்த வழிக்கு நாம் திரும்பாமல் அஹிம்சை வழியில் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் எமது பிரச்சினைக்குத் தீர்வைக் காண விரும்புகிறோம்.

சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவுகட்டுவோம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் நாம் அங்குள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் இது குறித்துக் கலந்துரையாடுவோம். அதேவேளை, பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வரும் சர்வதேச நாடுகளின் தலைவர்களுடனும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைப்போம்” – என்றார்.

Related Posts