இராணுவமும் அரசாங்கமும் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் – கஜேந்திரன்

kajenthiranஇராணுவமும் அரசாங்கமும் தமிழர்களை ஏமாற்றி அச்சுறுத்தி அவர்கள் காணிகளை அபகரிக்க முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசைப்பிள்ளையேற்றத்தில் 52 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள பெண்ணொருவரின் 50 ஏக்கர் காணியை படை முகாமிற்காகச் சுவீகரிக்கும் நோக்குடன் நிலஅளவைத் திணைக்கள அலுவலர்களினால் காணி அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, அளவீடு செய்யும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்யும் நடவடிகைக்கையை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய (நேற்று) தினம் அளவீடு செய்யவிருந்த காணி இராணுவ படைத்தலைமையகத்திற்காகவே சுவீகரிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே அந்தக் காணி உரிமையாளரின் அனுமதியின்றி அக்காணியில் இராணுவ படைத்தலைமையகம் அமைக்கப்பட்டு, அந்தத் தலைமையகம் திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.

இக்காணி விலைக்கு வாங்கப்பட்டே அதில் படைத்தலைமையகம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுவொரு அப்பட்டமான பொய் என்பது இப்பொழுது தெரிகிறது.

இராணுவமும் சரி அரசாங்கமும் சரி தமிழர்களை எப்படியாவது ஏமாற்றி அச்சுறுத்தி தமிழர்களின் இந்தக் காணிகளை பறிக்க வேண்டும் என்ற நடவடிக்கையாகவே இந்தச் செயற்பாடுகள் இருக்கின்றன.

மக்களது விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் இந்த நில அபகரிப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என்பதை மிக ஆணித்தரமாக தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் காணி அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் அதனையும் எதிர்ப்போம் என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor