இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெற்றோலிய விநியோகத்தர் சங்கத்தின் இணைச் செயலாளர் நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையாற்றும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் வாகனங்களுக்கு கியு.ஆர். முறைமைக்கு இணங்க எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த காலங்களில் வாகனங்களுக்கு, வாகன இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், இந்த முறைமை இன்றிலிருந்து நடைமுறையில் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.