இராணுவப் பயிற்சியை நிறுத்துங்கள் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Joshep-starlin2பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கு தெரிவான மாணவர்களுக்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் பயிற்சிக்கு சென்ற மாணவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அதனையடுத்தே ஆசிரியர் சங்கம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததாவது,

கல்வித்துறையை இராணுவமயப்படுத்தல் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்குதல் என்பன நிறுத்தப்பட வேண்டும்.

எனினும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக துறையினரும் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டுவந்தனர்.

இருப்பினும் இச் செயல் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. அண்மையில் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கிய தலைமைத்துவப்பயிற்சியின் போது அதிபரொருவர் மரணமடைந்தார்.

மேலும் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நொச்சியாகமையைச்சேர்ந்த மாணவன் கண்ணொருவரியில் பயிற்சியின் போது சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை ஒன்றின் பின்னர் மரணமடைந்துள்ளார்.

எனவே, இந்த இராணுவ தலைமைத்துவப்பயிற்சியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி

தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் மரணம்