கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6 ஏக்கர் காணியும் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபரிடம் கையளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடுவிக்கப்பட்ட காணியில் செல்வாநகர் மற்றும் முழங்காவில் துயிலும் இல்ல காணியும், ஸ்கந்தபுரம் கரும்பு தோட்ட காணியும் அடங்குகின்றமை குறிப்பிட தக்கதாகும்.
மேற்குறித்தவாறு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் தமக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியில் தனியார் காணிகள், அரச காணிகள், விவசாய காணிகள் அடங்குவதாகவும், காணிகளை பொறுப்புற்றுமாறு பிரதேச செயலாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.