இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முன்னர் எனது காணியில் தீக்குளிப்பேன் – காணி உரிமையாளர்

எனது உயிர் எனது சொந்த காணியிலேயே போக வேண்டும். இராணுவத்தினர் எனது காணியை அபகரித்து முகாம் அமைக்கும் முன்னர் எனது காணியில் நான் தீக்குளித்து உயிர் துறப்பேன் என அச்சுவேலியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவர் சரவணமுத்து இரத்தினம் தெரிவித்தார்.

saravanamuththu-raththenam

அச்சுவேலி இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்ய நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்த சரவணமுத்து இரத்தினத்திடம் கருத்துக்கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த முதியவர் மேலும் தெரிவிக்கையில்.

இராணுவ முகாமுக்காக எடுத்துக்கொள்ளப்பட 53 பரப்பு காணியில் எனது 5 பரப்பு காணியும் உள்ளடங்குகின்றது. இந்த 5 பரப்பு காணியும் 1962ஆம் ஆண்டு எனது திருமணத்தின் போது எனது மாமனாரால் சீதனமாக தரப்பட்டது. தபால் உத்தியோகஸ்தராக கடமையாற்றிக் கொண்டும், இக்காணியில் விவசாயம் செய்து கொண்டுமே எனது மூன்று பெண்பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு என் குடும்பத்தை நடத்தினேன்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு நாம் மீண்டும் எமது சொந்த இடங்களில் குடியேறிய போது, எமது தோட்டக் காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டு இருந்தனர்.

இதனால் நாங்கள் மீண்டும் வந்து விவசாயம் செய்ய முடியாது போனது. நான் தபால் உத்தியோகஸ்தராக கடமையாற்றியதன் மூலம் வந்த வருமானத்தை கொண்டே எனது குடும்பத்தை கொண்டு நடத்தினேன். எமது காணிகளில் இருந்து என்றோ ஒருநாள் இராணுவத்தினர் வெளியேறுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் 18 வருடங்கள் ஆகியும் அவர்கள் வெளியேறவில்லை

இன்று எமது காணிகளை சுவீகரித்து நிரந்தரமாக முகாம் அமைக்க முயல்கின்றனர். எமது காணிகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று இராணுவத்தினரிடம் கேட்டால், இராணுவத்தினர் சொல்கின்றனர், “ஏன் இதற்கு முதல் இக்காணிகளை ஒப்படைக்க கோரவில்லை என்று”.

அன்று நாட்டிலே அவசரகால தடைச்சட்டம் அமுலில் இருந்தது. அந்த சட்டத்தின் பிரகாரம் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் இருந்தன. அதன் பயம் காரணமாக நாம் இராணுவத்தினரிடம் எமது காணிகளை கையளியுங்கள் என கோரவில்லை இன்று நாட்டிலே யுத்தம் முடிவடைந்து விட்டது அவசரகால தடைச்சட்டமும் அமுலில் இல்லை. இதனால் எமது காணியை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று கோருகிறோம் என்று கூறி இருந்தேன்.

இன்று எனது ஓய்வூதியம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டே குடும்பம் நடக்கின்றது. எமது மகள்மாரின் திருமணத்திற்கு இக்காணிகளை சீதனமாக கொடுக்க வேண்டும். இப்பகுதியில் ஒரு பரப்பு காணி 5 லட்சத்திற்கும் அதிகமாக விலை போகின்றது. இந்நிலையில் அவர்களுக்கு வேறு காணிகள் வாங்கி கொடுக்கும் அளவுக்கு எமக்கு வசதி கிடையாது.

எமது காணிகளை இராணுவத்தினர் எம்மிடம் ஒப்படைத்தால் மட்டுமே அதனை அவர்களுக்கு கொடுக்கலாம். எனது உயிர் எனது சொந்த காணியிலையே போக வேண்டும். இராணுவத்தினர் எனது காணியை அபகரித்து முகாம் அமைக்கும் முன்னர் எனது காணியில் நான் தீக்குளித்து உயிர் துறப்பேன். அவ்வாறு நான் எனது காணியில் உயிர் துறந்தால், அப்போதாவது எனது காணியில் எனது குடும்பத்தார் எனது சாமதியைக் கட்ட இந்த இராணுவத்தினர் அனுமதிப்பார்களா என்று தெரியாது என அவர் மேலும் கூறினார்.