இராணுவத்தினரின் காணி அபகரிப்பிற்கு எதிராக போராடத் தயார்!- கௌரிகாந்தன்

ARMY-SriLankaயாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக மேற்படி பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி. வடக்கிலும் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதைப் போல வலி. தென்மேற்கு பிரதேசத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் மேற்படி சபையின் உறுப்பினர் கௌரிகாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலி.தென்மேற்கு பிரதேசம் உட்பட மாவட்டம் மாகாணம் என தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தின் காணி மற்றும் நில ஆக்கிரமிப்புக்களும் மற்றும் அபகரிப்புககளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதன் தொடராக வலி. தென்மேற்குப் பகுதியிலும் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதே போன்று பொது மக்களது காணிகள் மற்றும் வீடுகளையும் அபகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்திருக்கின்றனர்.

இதே போன்று பொலிஸாரும் பொது மக்களது காணிகள் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதாவது இப்பிரதேச சபைக்குட்பட்ட இளவாலைப் பகுதியில் பத்து வீடுகளும் மானிப்பாயில் இரண்டு வீடுகளுமாக பொலிஸார் வைத்துள்ளனர்.

இவ்வாறு இராணுவமும் பொலிஸாரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற அல்லது அபகரித்து வைத்திருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளைத் திரும்ப வழங்க வேண்டுமென கோரி வருகின்ற நேரத்தில் அதனை நிரந்தரமாக கைப்பற்றுகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மானிப்பாய் கூழாவடியில் இராணுவத்தினர் அமைத்து வைத்திருக்கின்ற முகாம் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை.

இதற்கு உறுதிகளும் இருக்கின்ற நிலையில் இதனை அபகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வலி.வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் இவ்வாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பிரதேச சைபயின் ஆறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.