Ad Widget

இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன.

குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் சில மாதங்களுக்கு முன்னரும் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளானதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குருக்கள்மடம் கிருஸ்ணன் கோவில் மீது தாக்குதல் நடத்திய நபர்களினால் அங்கிருந்த நவக்கிரகங்கள் உட்பட 13 விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

குறித்த ஆலயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல் இனவாதத்தின் வெளிபாடு என்று கிழக்கு மாகாணசபையின் அமைச்சர் கே. துரைராஜசிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில் மீதான தாக்குதலுக்கு நிர்வாக முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்கேகம் வெளியிட்டுள்ள போதிலும், ஆலய நிர்வாகத்தினர் அதனை மறுப்பதாகவும் துரைராஜசிங்கம் குறிப்பிடுகின்றார்.

இந்தக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் துரைராஜசிங்கம் கோரியுள்ளார்.

Related Posts