இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது – கிளி.விவசாயிகள்

iranaimadu-kulam-eranaimaduஇரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இரணைமடுக் குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் மேற்கண்டவாறு கூறினார்.

கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கமக்காரர் சம்மேளனச் செயலர் முத்து சிவமோகன், யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் வழங்குவதன் அடிப்படையில் இரணைமடு குளத்தை புனரமைக்க வேண்டாம் என்று கூட்டத்தில் கோரினோம் என குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுத் தண்ணீரை கொண்டு செல்வதை ஏற்கமுடியாது. இதற்கென ஏற்கனவே வழங்கப்பட்ட அறிக்கைகள் விவசாயிகளை புறம்தள்ளி தயாரிக்கப்பட்டுள்ளன.

எமது குளத்தை எமது தேவைகளுக்காக மட்டுமே அபிவிருத்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் எமது பிரதேசத்தை அவதானித்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் வழங்குவது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முடிவெடுக்கலாம் என்று கூட்டத்தில் தெரிவித்தோம், என்றார்.

இப்போது இந்தத் திட்டத்தை நிறுத்தும்படி கூறியுள்ளோம். ஆசிய அபிவிருத்தி வங்கி எமது நலனைக் கருத்தில் கொண்டு அறிக்கையைத் திருத்தம் செய்யுமானால் அது பற்றி மீண்டும் ஆராயமுடியும் என்றும் திட்டவட்டமாக கூறியதாக சிவமோகன் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கருத்து வெளியிடுகையில், இந்தத் திட்டம் குறித்து கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடினோம். அவர்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். விவசாயிகளை பொறுத்த மட்டில் இந்தத் திட்டத்துக்கு முன்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்த போதும் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார்கள். யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதானால் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டுதான் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து என்றார்.

இந்தக் கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப் பணிப்பாளர் குரூஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் பாரதிதாசன் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.