Ad Widget

இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை கட்டியெழுப்புவோம்!

இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை நாம் அனைவரும் கட்டியெழுப்புவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் இன்று (25) அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நத்தார் தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றின் மூலம் தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்துவம் ஐக்கியப்படும் முறையை முழு உலகுக்கும் கற்றுக் கொடுத்த கர்த்தரின் பிறப்பைக் கொண்டாடும் மகிமை மிக்க நிகழ்வு நத்தார் ஆகும்.

விடுதலையின் பாதையை கற்றுத் தருவதற்கு, அன்பின் வாழ்க்கையை விளக்கித் தருவதற்கு மனிதராகப் பிறந்த தேவ புத்திரரின் பிறப்பை மிகவும் விமர்சையாகக் கொண்டாடும் நாம் அவருடைய வாழ்வு முன்மாதிரி மூலம் எமது வாழ்வையும் கட்டியெழுப்ப முயற்சியெடுக்க வேண்டும்.

தற்கால சமூகம் வேண்டி நிற்பதும் இன, மத பேதத்தினைக் கருத்திற் கொள்ளாத சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்துவத்துடன் கைகோர்த்த, நற்பண்புகள் மிகுந்த ஒரு சூழலையாகும்.

சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி நிலைநாட்டப்படும் சிறந்த ஒரு தேசத்தையாகும். அதற்காக வேண்டி ஒன்றுபட்டு, ஒரே மனதுடன் செயற்படுவது எமது கடமையாகும். இயேசுநாதர் அவர்களின் பிறப்பு இடம்பெற்ற நத்தார் தினத்தைக் கொண்டாடும் எம் அனைவருக்கும் அப்போதுதான் நத்தாரினை அர்த்த பூர்வமானதாக மாற்றிக் கொள்ள முடியும்.

உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான, அர்த்தபூர்வமான நத்தார் தினமாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Posts