இன்று 313 முன்னாள் புலி உறுப்பினர் சமூகத்துடன் இணைப்பு

யுத்தத்தின் போது சரணரடந்த கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 313 பேர் இன்யய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றிலேயே இவர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.

மேலும் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள 427 பேர் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதுடன் அவர்களும் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவர் எனவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் அவர்களுடைய வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சுமார் 1400 தமிழ் அரசியற் கைதிகள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது சுமார் 800 பேர் வரையிலானோர் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் ஏனையோர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எஞ்சியிருப்பவர்களும் விரைவில் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.