Ad Widget

இந்திய வீட்டுத் திட்டத்தில் 40,000 வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன – விக்னேஸ்வரன்

இந்திய வீட்டு திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் மாத்திரமே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் தட்சனா மருதமரு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் நடமாடும் சேவையில் பங்கேற்று, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு வசதிகள் இல்லை எனவும் வீடுகளைப் பெற்றுத் தருமாறும் மக்கள் தம்மிடம் முறையிடுவதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மக்களின் வீட்டு வசதி பிரச்சினையை தீர்ப்பது சிக்கலான விடயம் என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் வீடுகளை வழங்குவதற்கான நிதி தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் 65 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும், அவ்வாறு ஏற்படின் மக்களின் வீட்டுப் பிரச்சினையையும் விரைவில் தீர்க்க முடியும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் முன்னெடுத்த குறைநிவர்த்தி செய்யும் நடமாடும் சேவை ஊடாக மக்களின் பிரச்சினைகளை தாமதமின்றி நிவர்த்தி செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தாமதத்தையும் மக்களின் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக இவ்வாறான நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமது நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை இதன் மூலம் ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதன் ஊடாக பதில் கூற வேண்டிய கடப்பாட்டையும் நிறைவுசெய்வதாக வட மாகாண முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts