Ad Widget

இந்திய, தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்! – சுமந்திரன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீன்பிடிக்கும் தென்பகுதி மீனவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஜே. வி. பி. கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் அடிவலை இழுவைப் படகு மீன்பிடி முறை ஆகிய இரண்டிலும் பாரதூரமான பிரச்சினை காணப்படுகிறது.

அத்துமீறிய மீன்பிடியைத் தடுக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். “பொட்டம் ட்ரோலிங்” எனப்படும் அடிவலை இழுவைப்படகு முறையினால் எமது கடல் வளம் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. பொட்டம் ட்ரோலிங் இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறையாகும். இருந்த போதும் உள்நாட்டு மீனவர்கள் சிலரும் இம்முறையை பயன்படுத்துகின்றனர்.

எனவே இந்த முறையை சட்ட ரீதியாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் நான் கடந்த பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமொன்றை முன் வைத்திருந்தேன்.

இது மாத்திரமன்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தென்பகுதி மீனவர்களின் மீன்பிடியால் அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஒரு பருவ காலத்தில் தென் பகுதி மீனவர்கள் அங்கு சென்று மீன்பிடிப்பது வழமையானது. எனினும் தற்பொழுது தென்பகுதி மீனவர்கள் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடன் அங்கு தொடர்ச்சியாக மீன் பிடிக்கின்றனர். இதனை தடுப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Posts