இதுவரை மக்கள் தொகை தொடர்பாக சரியான புள்ளி விபரங்கள் இல்லை – சுரேஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக அம் மாவட்டத்துடன் இணைக்கப்படாத போதிலும் நிவாரணங்களை வழங்குகின்ற பொழுது அப் பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமையளிக்கப்படுகிறது.

suresh

இதில் சில முறைகேடுகளும் இடம்பெற்று வருவதால் இங்கு வாழ்கின்ற மக்கள் தொகை தொடர்பான சரியான புள்ளி விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வெலிஓயாவில் குடியேற்றப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வெலிஓயாவில் வாழுகின்றவர்கள் தொடர்பான சரியான புள்ளி விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற பிரதேச செயலர் பிரிவாக உள்ள வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக இன்னமும் இம்மாவட்டத்துடன் இணைக்கப்படவில்லை. இப்பகுதியில் வாழுகின்ற மக்களுக்கு மட்டுமே மானிய காலத்தில் அதிகளவான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை எமக்குத் தெரியவந்துள்ளது.

உதாரணமாக நாடளாவியரீதியில் நிலவுகின்ற கடும் வறட்சியின் பொழுதும் இலாபம் தேடமுற்பட்டுள்ளனர். வறட்சியால் வெலிஓயாவில் மட்டும் 4 ஆயிரத்து 345 குடும்பங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் தரவு சேகரிப்பின் போது தவறவிடப்பட்டவர்கள் என மேலும் ஆயிரத்து 200 குடும்பங்களையும் வெலிஓயாவில் இணைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இல்லாத சனத்தொகையை காட்டி ஒரு இனம் சார்ந்தவர்களுக்கு மட்டும் எவ்வாறு அதிகளவான நிவாரணங்களை வழங்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே இந்த உதவிகள் உண்மையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதையும் அதிகாரிகள் அவதானிக்க வேண்டும். இதேபோல் இந்த உதவிகள் வேறு நபர்களிடம் செல்வதைத் தடுப்பதற்கு வெலியோயாவில் வசிக்கின்றவர்களின் சரியான புள்ளிவிபரங்களை வெளியிடவேண்டும் என்றார்.

இதேவேளை வெலியோயாவில் வசிக்கின்ற மக்களின் தொகை தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கேட்டபொழுது அதற்கு அவர் அங்கு 3 ஆயிரத்து 300 குடும்பங்கள் வசிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.