யாழ்ப்பாணத்தில் இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சமூக, கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதுடன், சமூக, கலாசார சீரழிவுகளுக்கு இடம் கொடுக்கும் நெற்கபே தடை செய்யப்பட்டு உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சைபர் குற்றச் சட்டம் உடனடியாக யாழில் அமுல் படுத்தப்பட்டு, நெற்கபே மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பில் தொடர்ந்து கண்காணிக்குமாறும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மல்லாகம் நீதவான் நிதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாணை தொடர்பாக பிணை மனு மேல் முறையீடு ஒன்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
அத்துடன் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், மாவணர்வகள், மாணவிகள் தனியாக நெற்கபேகளில் அனுமதிக்கப்படக் கூடாது. சிறுவர்கள் பெற்றோர்களுடன் வருகைதரும் பட்சத்திலேயே அவர்கள் நெற்கபேக்களுக்குள் அனுமதிக்கபட வேண்டும். மாணவர்கள் பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களுடன் வருகை தரும் பட்சத்திலேயே நெற்கபேக்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காதலர் பொழுதுபோக்கு மையமாக நெற்கபேக்கள் இயங்குவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொலிஸ் புலனாய்வு மூலம் நெற்கபேக்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றினை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றதா? என்பவை அவதானிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்ற கட்டளை பெறப்பட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஊடாக, தொலைத் தொடர்பு கோபுரங்களின் எல்லைகளை கண்டறிந்து, அதன் ஊடாக சைபர் குற்றங்கள் புரிவதற்காக இணையத்திற்குள் உள்நுழைபவர்கள் அவதானிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் நன்நோக்கத் தொடர்பாடலுக்காகவும், விரைவாக தகவல்களை பெற்றுக் கொள்பதற்காகவும் உருவாக்கப்பட்டவை. இவற்றினை பயன்படுத்தி சிலர் சமூக விரோத குற்றச் செயல்கள், கலாசார சீரழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சைபர் குற்றச் சட்டம் யாழ்ப்பாணத்தில் அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.