ஆளுநர் சந்திரசிறி தேர்தல் காலத்தில் வழங்கிய அதிபர் நியமனம்! யாழ். மேல்நீதிமன்றம் இடைக்கால தடை!

GA Chandrasiriஅரசியல் பின்னணியில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் செய்யப்பட்ட அரச நியமனமொன்றிற்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

வடமாகாணசபை தேர்தலை முன்னிட்டு வடமராட்சியின் முன்னணி மகளிர் கல்லூரியான உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கான அதிபர் நியமனமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இந்த நியமனத்தினை வழங்கியிருந்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இத்தகைய நியமனங்களை செய்ய முடியாதென்ற விதிமுறையினை மீறி அப்பட்டமாக வடமாகாண சபையினது கல்வி அமைச்சினால் இப்புதிய நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

இத்தேர்தல் விதி முறைகள் மீறல் தொடர்பில் புகார்கள் பல செய்யப்பட்ட போதும் அவை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

அச்சம் காரணமாக கல்வி வலய, திணைக்கள அதிகாரிகள் மௌனம் காத்திருந்தனர்.

அந்நிலையில் ஏற்கனவே அதிபர் ஒருவர் அப்பாடசாலையில் பணியாற்றி வந்திருந்த நிலையில், அரசியல் நோக்கத்திற்காக மேலுமொரு அதிபர் நியமிக்கபட்டதற்கெதிராக மாணவர்களது பெற்றோர் யாழ்.மேல்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

அவ்வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே நீதிபதி அந்நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எந்த அடிப்படையில் அதிபர் நியமனம் முன்னெடுக்கப்பட்டதென கேள்வி எழுப்பப்பட்ட வேளை, வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பணிப்பு மற்றும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவு பிரதிகளை சமர்ப்பித்தனர்.

இதையடுத்தே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையின் போது வடமாகாண சபையின் கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் வலய கல்வி திணைக்கள அதிகாரிகள் நீதிமன்ற அழைப்பின் பேரில் சமுகமளித்திருந்தனர்.