வலி.வடக்கில் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு?

army_palaly1வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இது குறித்த அறிவிப்பு ஜனாதி பதியின் யாழ். பயணத்தின் போது வெளியிடப்படவுள்ள தாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வலி.வடக்கில் உள்ள எஞ்சிய 18 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்களது நிலங்கள் விடு விக்கப்படாமல் நிரந்தரமாக படைத்தரப்பின் வசமாகி விடலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னமும் வலி.வடக்கில் 24 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தேசியப் பாது காப்பைக் காரணம் காட்டி குறித்த பகுதிகளை படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

ஆயினும் மேற்படி காணிகளில் விவசாயம், யோக்கட் உற்பத்தி, உல்லாச விடுதி போன்ற நடவடிக்கைகளையே படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
அத்துடன் பாதுகாப்புவலயப் பிரதேசத்தை நிரந்தரமாகக் கையகப்படுத்தும் நோக்குடன் நிரந்தரப் பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பகுதிக்குள் உள்ளடங்கும் பிரதேசத்திலுள்ள மக்களது வீடுகளும் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காங்கேசன்துறையில் 3 பிரிவுகள், தையிட்டியில் 2 பிரிவுகள், குரும்பசிட்டியில் ஓர் கிராமசேவகர் பிரிவு என்று மொத்தம் 6 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மீள்குடியமர்வுக்கான அறிவிப்பையும் யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணமாக நாளை வரவுள்ள ஜனாதிபதியே வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் எஞ்சிய 18 கிராமசேவகர் பிரிவுகளின் நிலை தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தப் பகுதி மக்கள் தொடர்பில் ஜனாதிபதி கரிசனை கொள்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலி.வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பார்வையிட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் முன்றலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், வலி.வடக்கு மீள்குடியமர்வுக் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.