அளுத்கமவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

Thuvikaranஅடக்குமுறைகளையும் கலவரங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த தவறுவது இலங்கை அரசு எம்மவர்களின் உரிமைகளையும் இறையாண்மையும் மெல்ல மெல்ல அழிப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

அளுத்கமவில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லீம் மக்களும் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற தாக்குதலானது இனவாத அடக்கு முறையின் அடுத்த அத்தியாயமாகும்.

காலங்காலமாக பௌத்தம் தவிர்ந்த மதங்களுக்கெதிராக அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்வாறான அடக்குமுறைகளையும் கலவரங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த தவறுவது இலங்கை அரசு எம்மவர்களின் உரிமைகளையும் இறையாண்மையும் மெல்ல மெல்ல அழித்துவருவதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தற்போது கடும் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்களுக்காக எமது குரல் வலுவாக ஒலிக்கும் என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்காக முஸ்லீம் அரசியல் தலைமைகள் எவ்வாறு செயற்படப்போகிரார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் தொடர்ந்தும் பதவிகளுக்காக தமது மக்களின் உரிமைகளை அவர்கள் பணயம் வைப்பார்களா என்கிற கேள்வி எழுகிறது.

மேலும் உரிமைப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இஸ்லாமிய தமிழர்களும் எம்முடன் ஒன்றிணைந்து திரண்ட சக்தியாக போராடுவதே எம் மீதான அடக்குமுறைகளை நிறுத்தி எதிர்காலத்தில் எமது நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

Related Posts