தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை ஒரு தரப்பு மட்டும் அனுபவிக்காமல் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.
ஆனைக்கோட்டை கூழாவியடி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை நிரந்தரமாக அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ‘பொதுமக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது முற்றாக நிறுத்தப்படவேண்டும். மக்களின் காணிகளில் மக்கள் குடியமர அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக நிறுத்திய காணி சுவீகரிப்பு நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்.
தொடர்ந்து காணிகள் சுவீகரிக்கப்பட்டால், வடக்கு சிங்கள தேசமாக மாற்றமடையலாம். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் உளரீதியாக நலிவடைந்துள்ளனர். அவர்களை மேலும் துன்புறுத்தாமல் அவர்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க வழிசெய்ய வேண்டும். மக்கள் அச்சத்துடனும் ஏக்கத்துடனும் இருக்கின்றனர். மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.