அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்த தீர்மானம்

sunthrsing-vijayakanthஇலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ததோ அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளான எமது சகோதர, சகோதரிகளையும் இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி, எதிர்வரும் 20ஆம் திகதி காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்த இருப்பதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மகஜர் ஒன்றினை கையளிக்கவும் உள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந்த் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘கடந்த 30 ஆண்டுகாலாக நடைபெற்று வந்த தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு எமது தமிழ் தேசியத்தின் உரிமைக்காக உயிர்த் தியாகங்களையும், உடற் தியாகங்களையும், சொத்து இழப்பு தியாகங்களையும், உணர்வு ரீதியான தியாகங்களையும் செய்து வந்தார்கள்.

கடந்த 2009 ஆம் அண்டு மே மாதம் 18 ஆம் திகதியுடன் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழித்து தாம் யுத்தத்தை வெற்றி கொண்டதாக அறிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கருணா தற்போது இலங்கை அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருந்து வருவதுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்க துணையாக இருந்த கே.பி.பத்மநாதன் போன்றவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்து தமது உல்லாசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அத்தோடு இறுதிக்கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட 13000 இற்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு தற்போது சுதந்திரமாக சமுதாயத்துடனும் தங்களுடைய குடும்பத்துடனும் இணைந்து அன்றாட வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் போராட்ட காலங்களில் தாக்குதல்களுக்கு உதவி புரிந்தார்கள் என்றும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்றும் ஆதரவாளர்கள் என்றும் சந்தேகத்தின் அடிப்படையில் 1300 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையின் பல்வேறு சிறைகளில் தமது எதிர்காலத்தை தொலைத்து வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை விடுவிக்குமாறு கோரியே இவ் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏனைய அனைத்து அரசியல் கட்சியினரையும், மக்கள் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.