யாழ்ப்பாணம் தீவகப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் அதிகளவான விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் த. வசந்தசேகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். தீவகப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை சோதனை செய்யும் நடவடிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.
தீவகப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பொருளாதாரத்தில் குறைந்த நிலையிலேயே உள்ளனர். எனினும் அவர்களது பொருளாதார நிலையினையும் கருத்திற்கொள்ளாது அங்குள்ள வியாபார நிலையங்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இவ்வாறான நிலை தொடர்ந்தும் இடம்பெற கூடாது. அதனடிப்படையில் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், குளிர்பான நிலையம் ஒன்றும் பலசரக்கு வியாபார நிலையம் ஐந்துமாக 6 விற்பனை நிலைய உருமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி காலாவதியான பிஸ்கட் பைகளை விற்றனர் என்ற குற்றச்சாட்டிலும் சேடா வகைகளை அதிகவிலைக்கு விற்ற குற்றச்சாட்டிலுமாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அத்துடன் அங்குள்ள பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே குறித்த வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிப்புக்கள் எவையும் இன்றி நீதிமன்றத்தின் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக குறித்த நடவடிக்கையினைக் கைவிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.