அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

அச்சுவேலியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பம், பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளது.

அச்சுவேலி மேற்கு, ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசித்து வரும் இளம் தம்பதியினரின் வீட்டினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணியளவில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் புகுந்து வீட்டின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

வீட்டின் கேட், யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் என்பவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை சேதப்படுத்தி, வீட்டில் இருந்த தம்பதியினரையும் அச்சுறுத்திவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளன.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

இருந்த போதும் இன்றைய தினம் காலை 10 மணி வரையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor