அச்சுறுத்தி மரணச் சான்றிதழ் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

SURESHஇலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நடக்கும் இடங்களில்- அதே தினங்களில் வேறு குழுவினரால் மக்கள் அச்சுறுத்தப்பட்டு மரணச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளும் நடந்துவருவதாகவும், தொடர்ந்து நடந்துவரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கவனத்தில் எடுக்காதுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பதிவுசெய்துகொண்டிருந்த சந்தர்ப்பங்களில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட வேறுகுழுவினர் மக்களை நிர்ப்பந்தித்து மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சில இடங்களில் மக்களுக்கு அவர்களின் உறவினர்கள் உயிரிழந்துவிட்டனர் என்ற அடிப்படையில் நட்டஈடும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேமச்சந்திரன் கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்தி, காணாமல்போனவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது உயிரிழந்துவிட்டார்களா போன்ற முழுமையான தகவல்களையும் திரட்ட முன்னரே, அரசாங்கம் மக்களுக்கு மரணச்சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதை ஏற்கமுடியாது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு செய்கின்ற இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்காக மனித உரிமை அமைப்புகள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகமவை தொடர்புகொண்டு பிபிசி தமிழோசை வினவிய போது,

அப்படியாக மக்கள் அச்சுறுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை என்றும், மக்கள் சுதந்திரமாக வந்து வாக்குமூலம் அளித்துச் சென்றதாகவும் கூறினார்.