அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முடிவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவாளர்கள் என கூறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரை நீக்கும் காங்கிரஸின் முடிவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான சி.கஜன் மற்றும் ஜெ.நிதர்சன் ஆகிய இருவரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சாட்டி இருவரையும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க அக் கட்சியின் செயலாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்த முடிவுக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , இருவரையும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க இடைக்கால தடையுத்தரவு விதித்த நீதிமன்றம் , வழக்கினை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தது.