புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்த பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு தம்மை அடையாளப்படுத்தினால் தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் செயற்படும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் என்ற வகையில் இது வரையான செயற்பாடுகள் மகிழ்வையும் நிறைவையும் தந்துள்ளனவா? என குறித்த ஊடகம் முதலமைச்சரிடம் வினவியுள்ளது.
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஸ்வரன் சிரமமான சூழலில் தன்னால் முடிந்ததைச் செய்துள்ளமை நிறைவை தருவதாக கூறியுள்ளார்.
மேலும் தனது செயற்பாட்டை முன்னெடுக்க பலவிதமான அரசியல், சமூக, பொருளாதார சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினர்கள் உதவிக்கு வருவார்களானால் தன்னால் இன்னும் பலதையும் சாதிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி அரசியல் எம்மிடையே இருக்கும் சுமூக நிலையைச் சீர்கெடுக்க விடக் கூடாது எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
அடுத்தாக அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் நீங்களும் கூட்டமைப்பும் பிரிந்துள்ளீர்கள். இதற்கு என்ன காரணம் எனவும் முதலமைச்சரிடம் வினவப்பட்டுள்ளது.
இதற்கு பதில் வழங்கியுள்ள முதல்வர், பிரிவு என அதனை கூற போவதில்லை எனவும், மாறாக அரசியல் ரீதியான பார்வைகள் வித்தியாசப்படுவதே அதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.
அரசியல், தேசிய, பிராந்திய விடயங்கள் பற்றிய வித்தியாசமான நோக்குகளும், செயற்பாடுகளும் பிரிவினை போன்ற நிலைக்கு வித்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வேற்றுமைகளின் தாற்பரியங்களை புரிந்து கொள்ளுதலே இணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் எனவும் முதல்வர் எடுத்துரைத்துள்ளார்.
பொருளாதார திட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டினால் அரசியல் தீர்வு தடம்பெயர்ந்து போய்விடும் என தான் கூறியது திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறிவுள்ளார்.
அத்துடன் தமிழ் பேரவை கூட்டத்தில் தான் முன்வைத்த நான்கு வழி முறைகளில் நான்காவது வழி முறையை தேர்தெடுப்பதே சிறந்த வழி எனவும் கூறியுள்ளார்.
அதாவது அரசியல் அபிலாஷைகளை அடையும் வண்ணம் ஒரு பக்கச்சார்பற்ற சமூக இயக்கத்திற்குத் தலைமை தாங்குவது சிறந்தது எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
மக்களின் தேவைகள், அபிலாசைகளை புரிந்து கொள்ளத் தவறிய ஒரு சிலரைக் கொண்ட குழுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் போதாமை தன்னால் உணரப்பட்டுள்ளதாகவும், அதனால் தன்மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் சம்பந்தனோ, சுமந்திரனோ இல்லை என்பது மனவருத்தத்தை தருவதாகவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.