வடக்கு முதல்வர் தயாராக இருக்கின்றார் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியை கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாட முடியும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வாராந்த நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இரண்டாவது தடவையாக முதலைமைச்சு பதவிக்கு போட்டியிடுவது தொடர்பில் மனதளவில் தயாராக வேண்டும்.
இவற்றுக்கு முதல்வர் தயார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக, மாற்று அணி ஒன்றின் ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த திட்டமானது விக்னேஸ்வரன் விடயத்தில் மாத்திரம் அல்ல. நாங்கள் வேறு எந்த வழியிலாவது எதிர்காலத்தில் நடக்கும் மாகாண மற்றும் தேசிய மட்டத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, ஒரு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கவுள்ளோம் என கூறினார்.
மேலும் வடக்கு மாகாண மக்கள் கூட்டமைப்பை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை, உள்ளூராட்சித் தேர்தல்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. எனவே அவர்களின் வாக்குவங்கி, ஏற்கனவே 35 வீதத்தினால் சரிந்து விட்டது.
இந்நிலையில் மாற்று அரசியல் முன்னணி ஒன்றின் மீது மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.