முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் தேவை அரசிற்கு இல்லை: ராஜித

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்தவிதத் தேவையும் கிடையாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதுதொடர்பில் நாம் ஆராயவேண்டும். இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டியத் தேவை அரசாங்கத்துக்கு இல்லை.

முதலமைச்சர் இதற்கான சாட்சி இருப்பதாக கூறமுடியாது. அவ்வாறான குடியேற்றம் இடம்பெறுகிறதா இல்லையா என்பதையே அவர் கூற வேண்டும். சாட்சி தொடர்பில் ஆராய வேறு அதிகாரிகள் இருக்கிறார்கள்.

வடக்கில் சிங்கள குடியேற்றங்களோ அல்லது தமிழருடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் வடக்கு முதலமைச்சர் அரசாங்கத்துடன் தான் கலந்துரையாட வேண்டும்.

ஆனால், வடக்கில் எவ்வித சிங்கள குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான வேலைத்திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தாது.

கோட்டாவின் காலத்துடனேயே இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு மக்களுக்கு யுத்த காலத்தில் இருந்தப் பிரச்சினைக்கும் தற்போதுள்ள பிரச்சினைக்கும் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணசபையால் தமக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், அங்குள்ள இராணுவத்தினர் மீதும், குறிப்பாக சிங்களப் பொலிஸார் மீதும் அவர்கள் நல்ல அபிப்பிராயத்துடன் தான் இருக்கிறார்கள்.

ஆனால், இவை மட்டும் அந்த மக்களுக்கு தீர்வு என நாம் கூறவில்லை. இதனையும் மீறி அந்த மக்களுக்கு பாரியப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.

Related Posts