இலங்கையில் இதுவரை 60,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் இன்றைய நூற்றாண்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புக்கள் இணைந்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளன. நேற்று கொழும்பில் ஆரம்பமான இந்த வாகன பேரணி நாளை வடக்கிற்கு சென்றடையவுள்ளது. இந்நிலையில், இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாய்க் (Biraj Patnaik) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவில் இப்பிரச்சினை இன்று அதிகரித்துச் செல்வதாக குறிப்பிட்ட அவர், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பிரச்சினை தொடர்பில் பேசுவோர் மௌனிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இந்தியாவில் 6 நகரங்களில் கடுமையாக தேடுதல் நடத்தி பெருமளவான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை துரதிஷ்டமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டத்தில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தால் மக்கள் இவ்வாறு காணாமல் ஆக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த பிராஜ் பட்நாய்க், சர்வதேச சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாதென சுட்டிக்காட்டினார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென தெரியாமல் அவர்களது உறவினர்கள் ஒவ்வொரு நிமிடமும் ஏக்கத்துடன் வாழ்கின்றனர். இந்த நிலை யாருக்கும் ஏற்படக் கூடாதென்றும் இவ்வாறு காணாமல் ஆக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் குறிப்பிட்ட பிராஜ் பட்நாய்க், இப்பிரச்சினையை இல்லாமல் செய்வதற்கான நேரம் வந்துள்ளதென்றும் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.