தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கான வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று (20) திங்கட்கிழமை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகர சபை பொறிளியலாளர் ஊடாக நியமிக்கப்பட்ட 3 ஊழியர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து வேலி அமைக்கும் பணியை பொறியிலாளர்களால் இடைநிறுத்தப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக மாநகர சபையின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.
அதன்பிரகாரம், வேறு ஊழியர்களின் உதவியுடன் வேலி அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளது.
“இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன் ஏனைய உறுப்பினர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவித்திருந்தால், அந்த இடத்திற்கு வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க முடியும். ஏன் அழைக்கவில்லை” என்று சபையில் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
உறுப்பினர்களின் மத்தியில் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்பில் கடும் விவாதம் இடம்பெற்றது.
இந்த நினைவுப் தூபிக்கான பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் குறித்தொதுக்கப்பட்ட 2 லட்சம் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ளதாக சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.