ஓர் அரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமையினால், நாம் இன்று நீதிமன்றில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், போர்க்காலத்தில் மஹிந்த அரசு செயற்பட்டதைப் போலவே, இந்த நல்லாட்சி அரசும் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரை வேறு இடத்திற்கு மற்ற நடவடிக்கைகளை எடுப்பதாக நான் அறிகின்றேன். குறிப்பாக நல்லவர்கள், சிறந்த திறமையுடையவர்களை இங்கு விட்டுவைக்க மாட்டார்கள் என தோன்றுகின்றது.
முன்னாள் ஆளுநர் பலிகக்கார எனும் சிறந்த ஆளுநர் இங்கு இருந்த போதும், அவரை ஒருவருடத்திற்குள் மாற்றி இங்கு ஒரு அரசியல் வாதியை கொண்டு வந்துள்ளனர். அவரால் தற்போது நாங்கள் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக முதலமைச்சரால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட, அமைச்சர் தொடர்பான தீர்மானம் இதுவரை வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை.
இங்கு நற் சேவையில் ஈடுபடுபவர்களை தொடர்ந்தும் பணிபுரிய விடுங்கள் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என கூறினார்.