முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நாளை(புதன்கிழமை) எதிர்கட்சித்தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரிதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்தொழிலினால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்;படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் இனிகே ஜனக பிரசன்ன குமாரவினால் நாளை எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அமைச்சில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், எதிர்வரும் 12ஆம் திகதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவிற்கு நேரடியாக வருகை தருவதாக தெரிவித்துள்ள நிலையில், அன்;றைய தினம் தங்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் எடுத்து கூறவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரிதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.