கூட்டமைப்பு சிங்கள தேசியவாதத்தின் அங்கமாக செயற்படுகின்றது: கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள தேசிய வாதத்தின் ஓர் அங்கமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கூட்டமைப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைமுகமான ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘புதிய அரசியலமைப்பு என்பது ஒற்றையாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் என பல தடவைகள் தெரிவித்து வந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஒற்றையாட்சிக்கான ஒரு அரசியலமைப்பினையே உருவாக்கி வருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது, ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை போன்ற விடயங்களில் வெளிப்படையாக தெரியவந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts