யாழ்.மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதன்போது யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் மாவட்டத்தின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டன.
இதற்கமைய மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகள் 2255 பேருக்கு மாத்திரம் தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 5200 பேருக்கு உதவித் தொகை வழங்க வேண்டியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகவே மாற்று திறனாளிகளாக இருக்கின்றவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் மற்றும் தேவைகளைக் கருத்திற் கொண்டு அவர்கள் அனைவருக்குமான உதவித் தொகைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டுமென கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இணைத்தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.