நீதிபதி இளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை!

நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்பாதுகாவலரின் ஒரு வருடநினைவஞ்சலி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சரத் பிறேமசந்திரவின் ஒரு வருட நினைவஞ்சலியில் நீதிபதி மா.இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது இளஞ்செழியன் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சரத் பிறேமசந்திரவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சரத் பிறேமசந்திரவின் சமாதிக்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன் அங்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இளஞ்செழியனின் இந்த செயற்பாடானது தென்னிலங்கை மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், 15 ஆண்டுகளாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சரத் பிறேமசந்திர என்ற 51 வயதான பொலிஸ் சார்ஜன் உயிரிழந்திருந்தார்.

இதேவேளை, நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து சரத் பிரேமச்சந்திரவின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts