யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தின் மினி முகாமொன்று இயங்கிவந்துள்ளதாகவும், அதனையே தற்போது மாற்றியமைத்து வருகின்றனர் என்றும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி கோரியிருந்த போதும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து சுமார் 15 இராணுவத்தினர் வரை தங்கியிருந்துள்ளனர் என்றும், ஏனையோர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறிய முகாம் அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தை கையளித்துள்ள இராணுவம், கோட்டைக்கு அருகாமையில் தற்காலிக கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ளது.
வரலாற்று தொன்மை மிக்கதாகவும் யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும் காணப்படும் யாழ். கோட்டையில் இராணுவத்தை நிலைநிறுத்த ஏற்கனவே வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்பு ஆதரவளித்து வந்துள்ளது. எனினும், அவ்வாறு நிலைகொண்டால் மக்கள் நடமாட்டம் குறைவடைவதோடு, தமது அடையாளமும் அழிக்கப்படும் எனத் தெரிவித்து தமிழ் தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.