ஆவாக்குழுவின் பின்புலத்தில் இராணுவம்!

வடக்கில் வன்முறையில் ஈடுபட்டுவரும் ஆவாக் குழுக்களின் பின்புலத்தில் இராணுவத்தினர் செயற்படுவதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு, இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, யாழில் வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் பின்புலத்தில் தான் யாழில் வன்முறைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்தும் முற்றிலும் பொய்யான தகவல்கள்.

ஆவாக் குழுவை சேர்ந்தவர்கள் என பலர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எங்காவது இராணுவத்தினருக்கும் தமக்கும் தொடர்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்களா? எந்த ஆதாரத்தை வைத்து இராணவத்தின் பின்புலத்தில் ஆவாக்குழுக்கள் செயற்படுவதாக கூறுகின்றனர்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவ்வாறான குழுக்களுக்கு உடந்தையாக செயற்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து யாழில் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ”யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றதே தவிர புதிதாக வடக்கிற்கு படையினர் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை” எனக் குறிப்பிட்டார்.

Related Posts