தமிழர்களுக்கு இரண்டாம் மொழியறிவு அவசியம்: முதலமைச்சர்

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு இரண்டாம் மொழியறிவு அவசியம் என்றும், அந்த வகையில் ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகத் தெரிவு செய்து பயிற்றுவிக்க வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் முக்கிய கடப்பாடாகும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் பாலர் பாடசாலையொன்றின் பரிசளிப்பு விழா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேல் வகுப்பிற்குச் செல்கின்ற போதும், மேற்படிப்புக்கான தேடல்களை மேற்கொள்வதற்கும் ஆங்கில அறிவு மிகவும் இன்றியமையாததென முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இன்றைய இளைஞர்கள் கல்வியில் உயர்ந்து, சிறந்த பதவிகளில் உள்ள போதும், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் பொதுமேடைகளிலும் சம்பாஷனைகளிலும் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாத நிலை உள்ளதென்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இரண்டாம் நிலை கல்வியாக ஆங்கிலத்தை திறம்படக் கற்பதே எதிர்காலத்திற்கு சிறந்ததென அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, கல்வியறிவுக்கு மேலதிகமாக விளையாட்டிலும் அக்கறை காட்ட வேண்டுமென குறிப்பிட்ட முதலமைச்சர், விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றாவிட்டால் உடல் வலுவிழந்து சோர்வுத்தன்மை ஏற்படுமென சுட்டிக்காட்டினார்.

Related Posts