யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கு பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குடா நாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் தொடர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அத்துடன், தொடரும் இவ்வாறான வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டி வருவதுடன், அதனை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.