வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வடக்கில் வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழில் கடந்த சில காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் விளங்குகின்றோம். எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டுமென்ற நிலைமை தற்போது எழுந்துள்ளது.
எமது சமூகத்தினரே வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, சமூகப்புரள்வு ஏற்படுகின்றபோது, அது குறித்து கரிசனையுடன் செயற்பட்டு அதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எமது கையிலேயே இருக்கின்றது.
வன்முறையை தடுக்க ஒவ்வொரு பிரதிநிதியும் கட்சி பேதமின்றி விழிப்புக்குழுக்களை அமைப்பதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான அனுசரணைகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.